இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்..?

image courtesy:BCCI
பும்ரா விளையாடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப்பை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் யார்- யாருக்கு பதிலாக இடம்பெறுவார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வரவில்லை. ஒருவேளை ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவும், அன்ஷுல் கம்போஜ்-க்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் இடம் பெறலாம் என கருத்துகள் நிலவுகின்றன.
மேலும் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.






