குசல் மெண்டிஸ், பெர்ணாண்டோ அரைசதம்; இலங்கை 248 ரன்கள் சேர்ப்பு


குசல் மெண்டிஸ், பெர்ணாண்டோ அரைசதம்; இலங்கை 248 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 7 Aug 2024 5:59 PM IST (Updated: 7 Aug 2024 6:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் நிசாங்கா 45 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் களம் இறங்கினார்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய அவிஷ்கா பெர்ணாண்டோ சதத்தை நெருங்கிய நிலையில் 96 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சரித் அசலங்கா 10 ரன்னிலும், ஜனித் லியானகே 8 ரன்னிலும், துனித் வெல்லாலகே 2 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கமிந்து மெண்டிஸ் களம் இறங்கினார்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 96 ரன்னும், குசல் மெண்டிஸ் 59 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது.

1 More update

Next Story