பிடிக்காது என்ற ஒரே காரணத்தினால் ராயுடுவை அணியிலிருந்து கழற்றி விட்ட கோலி - உத்தப்பா விமர்சனம்
ராயுடுவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காததாலேயே விராட் கோலி கழற்றி விட்டதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
மும்பை,
2019-ம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்த அம்பத்தி ராயுடு, அது நடக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை பகிர்ந்தார்.
அந்த தொடரில் இந்திய அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்த அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.
இந்நிலையில் ராயுடுவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காததாலேயே விராட் கோலி கழற்றி விட்டதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், யாராவது தம்முடைய அளவுக்கு இல்லை என்று உணர்ந்தால் அவர்கள் அணியிலிருந்து கழற்றி விடப்படுவார்கள். அதற்கு ராயுடு முதன்மையான எடுத்துக்காட்டு. அவருக்காக நீங்கள் வருந்துவீர்கள். ஒவ்வொருவருக்கும் விருப்பத் தேர்வுகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் ஒரு வீரரை உச்சநிலைக்கு அழைத்துச் சென்ற பின் நீங்கள் அவரை விட முடியாது. 2019 உலகக்கோப்பை ஜெர்சி, உபகரணங்கள் போன்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டில் தயாராக இருந்தார். உலகக்கோப்பைக்கு நாம் சென்று விளையாடுவோம் என்று ஆசையுடன் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நீங்கள் அவருடைய கதவை மூடி விட்டீர்கள். என்னைப் பொறுத்த வரை அது நியாயம் அல்ல" என்று கூறினார்.