இது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல - ஹெட் மற்றும் சிராஜ் மோதல் குறித்து ரோகித் சர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது போட்டியின்போது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி "வெளியே செல்லுங்கள்" என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது வார்த்தை மோதல் ஏற்பட்டது.
அதன் பின் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் "நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்" என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "அந்த நேரத்தில் நான் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்தேன். அதனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஹெட் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் அவருடைய விக்கெட்டை எடுத்த சிராஜ் அப்படி கொண்டாடினார்.
அதனால் இருவரும் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்கள். அது எனக்கு தெரியாது. அதே சமயம் அந்த ஒரு தருணத்தை மட்டும் பார்க்காமல் மொத்த போட்டியையும் பார்ப்பதே என்னுடைய வேலை. இந்தியா - ஆஸ்திரேலியா போன்ற தரமான 2 அணிகள் விளையாடும்போது இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம். போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாங்கள் கோட்டை தாண்டி கொண்டு வர விரும்பவில்லை.
அதே சமயம் இவ்வாறு எதிரணியுடன் சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது மோசமான விஷயமல்ல. சிராஜ் மட்டுமின்றி கடந்த காலங்களில் இது போல் நிறைய கிரிகெட்டர்கள் இப்படி ஈடுபட்டுள்ளார்கள். அங்கே ஆக்ரோஷத்திற்கும் அதிக ஆக்ரோஷத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.
கேப்டனாக நாங்கள் கோட்டை தாண்டாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்வது என்னுடைய வேலை. ஆனால் இது போன்ற சில வார்த்தைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் வீரர்கள் இது போன்ற பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன் விளையாடியுள்ளார்கள். எனவே இது போன்ற விஷயங்கள் தங்களுடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு தெரியும்" என்று கூறினார்.