இது வெறும் மனநிலை மாற்றம் - அதிரடி ஆட்டம் குறித்து ரகானே கருத்து
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் நாளை மோத உள்ளன.
பெங்களூரு,
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோத உள்ளன. மும்பை அணிக்காக அனுபவ வீரர் ரகானே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 432* ரன்கள் குவித்துள்ள அவர் மும்பை இறுதிப்போட்டிக்கு வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக காலிறுதியில் 94 ரன்கள் அடித்த அவர் அரையிறுதியில் 98 ரன்கள் குவித்து 36 வயதிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது அதிரடியாக ஆடி வருவதற்கான காரணம் குறித்து ரகானே தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இது வெறும் மனநிலை மாற்றம். உலகம் முழுவதிலும் டி20 பார்மட்டில் பயமின்றி சுதந்திரத்துடன் விளையாடுவது மிகவும் முக்கியம். நான் மிகவும் வலுவானவன் கிடையாது. அதனால் என்னால் பவர் ஹிட்டிங் செய்ய முடியாது. எனவே பந்துகளை டைமிங் கொடுத்து அடிப்பது அவசியம். 190 - 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினாலும் இப்போதும் நான் கிளாஸ் ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறேன்.
டி20 என்பது அனைத்தும் பவர் ஹிட்டிங் மட்டும் கிடையாது. மிடில் ஆப், ஆன், கவர்ஸ் திசைக்கு மேலே இடது கை ஸ்பின்னர்களை அடிக்க முயற்சிப்பதை பற்றியதும் ஆகும். சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய போது அவர்கள் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள். களத்திற்கு சென்று என்னுடைய ஆட்டத்தை விளையாடுமாறு அவர்கள் கொடுத்த மெசேஜ் தெளிவாக இருந்தது. ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான போது நான் அதிரடியாக விளையாடினேன்.
ஆனால் ராஜஸ்தான் போன்ற மற்ற ஐ.பி.எல் அணிகளில் நான் நங்கூரமாக விளையாட வேண்டியிருந்தது. அதனாலேயே 120 - 130 ஸ்ட்ரைக் ரேட்டில் 15 - 16 ஓவர்கள் வரை விளையாடினேன். ஆனால் சி.எஸ்.கே அணியில் மெசேஜ் தெளிவாக இருந்தது. இந்தியாவுக்காக அறிமுகமாகும் முன் 6 வருடங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். இப்போதும் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கான ஆர்வம் எனக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக இப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.