விராட் கோலியின் ரெஸ்டாரண்டில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை இவ்வளவா..?

நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி மும்பையில் ரெஸ்டாரண்ட் வைத்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி உலகம் முழுவதும் பிரபலமானவர். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் அவர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். அது மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அவருக்கு சொந்தமாக மும்பையில் 'ஒன் 8 கம்யூன்' (One8 Commune) என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் உள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் மும்பை ரெஸ்டாரண்ட் பற்றியும் அங்கு இருக்கும் உணவுகளின் விலை விவரம் பற்றிய தகவலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
விராட் மும்பையில் பிரபலமான ஜூக்கு பகுதியில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் 2022-ம் ஆண்டில் அந்த ரெஸ்டாரண்டை தொடங்கினார். பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி புதுப்பித்து உணவகம் அமைத்துள்ளார்.
இந்த ரெஸ்டாரண்டின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.976 ஆகும். இது சற்று அதிக விலையில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
அதுபோக வெறும் சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ. 2,318 என்ற விலையில் உயர்ந்த அசைவ உணவு கிடைக்கிறது.
கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில் ‘விராட் பேவரைட்ஸ்’ என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. எல்லா வகையான உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கிறது. இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






