ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்வது யார்..?: குஜராத் -மும்பை அணிகள் நாளை மோதல்

Image Courtesy: @gujarat_titans / @mipaltan
ஐ.பி.எல். தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அகமதாபாத்தில் நாளை நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி சென்னைக்கு எதிராகவும், குஜராத் அணி பஞ்சாப்புக்கு எதிராகவும் தோல்வியை தழுவின. கடந்த ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்காத கேப்டன் பாண்ட்யா நாளைய ஆட்டத்தில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என நம்பலாம். போட்டியின் 2வது இன்னிங்சில் பனி பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீசவே முன்னுரிமை அளிக்கும்.
இரு அணிகளும் நாளைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.






