ஐ.பி.எல்.: தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா.. விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்கள்


ஐ.பி.எல்.: தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மா.. விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்கள்
x

image courtesy:PTI

ஐ.பி.எல். தொடர்களில் சமீப காலங்களாகவே ரோகித் சர்மா ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆன அவர், நேற்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீப காலங்களாகவே ஐ.பி.எல். தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரோகித் சர்மாவை இந்திய முன்னாள் வீரர்களான மனோஜ் திவாரி மற்றும் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு:- "இது ரோகித் சர்மா பெரிய ரன்கள் குவிப்பதற்கான நேரமாகும். ரோகித் போன்ற திறமைக் கொண்டவர் ஒரு சீசனில் 400 ரன்கள் அடிக்கவே தடுமாறுகிறார். கடந்த வருடம் 400 ரன்கள் அடித்த அவர் அதில் ஒரு சதத்தை அடித்தார். ஆனால் 800 - 900 ரன்கள் எங்கே? ரோகித் சர்மா அது போன்ற ஐ.பி.எல். சீசனை எப்போதும் கொண்டிருந்ததில்லை. விராட் கோலி எப்போதும் ரன்கள் அடிக்கிறார். அவருடைய தொடர்ச்சியான ரன்கள் அடிக்கும் திறன் அதிரடிக்கு சமம். அதே போல ரோகித் சர்மாவும் ஒரு வருடமாவது 600 - 700 ரன்கள் எடுக்க வேண்டும்" என்று விமர்சித்தார்.

இது குறித்து சேவாக் பேசியது பின்வருமாறு:- "ரோகித் எப்போது 600 700 ரன்கள் அடித்தார் என்று மனோஜ் திவாரி கேட்கிறார். ரோகித் சர்மாவின் ரசிகர்களாகிய நாமும் அவர் 600 - 700 ரன்கள் அடிப்பதைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால் ரோகித் அதை எப்போது செய்தார்? ஐ.பி.எல். தொடரில் 18 வருடங்களாக அதை செய்யாத அவர் தனது கெரியரின் காலங்களிலா செய்யப் போகிறாரா?" என்று கூறினார்.

1 More update

Next Story