ஐ.பி.எல்.; ராஜஸ்தான் அணிக்கு நன்றி - பட்லர் உருக்கம்
ஐ.பி.எல். 2025 தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை விடுவித்தது.
லண்டன்,
ஐ.பி.எல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை கடந்த 31ம் தேதி வெளியிட்டன. இதில் ராஜஸ்தான் அணி 6 வீரர்களை தக்க வைத்தது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), ஹெட்மையர் (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி தன்னை விடுவித்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக தனது கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்து கொண்டதற்கு நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.