ஐ.பி.எல்.: ஏலத்தில் வராத ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர்... காரணம் என்ன..?
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.
ஜெட்டா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
முன்னதாக இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஏலத்தில் எந்த அணி இவரை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் இவரது பெயர் கூட ஏலத்தில் வாசிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் வராமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஏலத்தின் 2-ம் மற்றும் கடைசி நாளான நேற்று விரைவாக ஏலத்தை முடிக்க அனைத்து அணி நிர்வாகங்களும் விரும்பியுள்ளன. இதனால் அன்றைய நாளின் பட்டியலில் 117-ல் இருந்து 557-வரை காத்திருப்பில் இருந்த வீரர்களில் வெறும் 143 வீரர்களை மட்டும்தான் ஏலத்தில் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து அணிகளின் நிர்வாகங்களும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்து பரிந்துரைத்துள்ளன.
இந்த 143 வீரர்களில் எந்த ஒரு அணியும் ஆண்டர்சனின் பெயரை குறிப்பிடவில்லை. இதன் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் ஏலத்தின்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.