ஐ.பி.எல்.: தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் - சென்னை கேப்டன் நம்பிக்கை

image courtesy: PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையுடன் இன்று மோதுகிறது.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி கேப்டன் பொறுப்பை கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் கூறிய வேளையில், இந்த சீசனிலும் தோனி விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது அனுபவமும், பேட்டிங் திறனும் சென்னை அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் தற்போது 43 வயதாகி விட்டதால் அவரால் முன்பு போல் பேட்டிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் கடந்த சீசனில் இறுதி கட்டத்தில் களமிறங்கினாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை திணறடித்தார். இதனை இந்த சீசனிலும் அவர் தொடரும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு பலமாக அமையும்.
இந்நிலையில் மகேந்திரசிங் தோனியால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- "அவரது பயிற்சி அவர் எதை சாதிக்க முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது. எனவே, இது மிகவும் எளிமையானது. பயிற்சியில் முடிந்தவரை அதிக சிக்சர்கள் அடிக்க முயற்சிக்கிறார். 43 வயதில் கூட அவரது பேட்டிங் திறன் அபாரமாக உள்ளது. அவரை போல் எங்களால் கூட அடிக்க முடிவதில்லை. நடப்பு தொடரில் அவர் எங்களுக்கு முக்கிய பங்களிப்பார். முந்தைய ஆண்டுகளை போல் அவர் இந்த முறையும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அவர் எங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருக்கிறார். அவரின் உடற்தகுதி திறன் முன்பை விட குறைந்தது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர். இப்போது நீங்கள் பார்த்தால், சச்சின் டெண்டுல்கர் கூட 50 வயதில் கூட சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.