ஐ.பி.எல்.2025: சில போட்டிகளை தவற விடும் கே.எல்.ராகுல்..? வெளியான தகவல்

image courtesy: PTI
நடப்பாண்டின் ஐ.பி.எல்.-ல் ஒரு சில போட்டிகளை கே.எல். ராகுல் தவற விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். -ம் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. இதனால் அவர் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சீசனின் தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளை கே.எல். ராகுல் தவற விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில், ராகுல் மனைவிக்கு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முதல் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் மனைவியை அருகில் இருந்து கவனிக்க அவர் விரும்புவதால் தொடக்க கட்டத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.