ஐ.பி.எல்.2025: அந்த விதிமுறை வேண்டாம்... பி.சி.சி.ஐ.க்கு அஸ்வின் கோரிக்கை


ஐ.பி.எல்.2025: அந்த விதிமுறை வேண்டாம்... பி.சி.சி.ஐ.க்கு அஸ்வின் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2024 3:58 AM GMT (Updated: 11 Aug 2024 5:47 AM GMT)

ஆர்டிஎம் விதிமுறைதான் ஐ.பி.எல். ஏலத்தில் உள்ள மிகவும் நியாயமற்ற விதிமுறை என்று அஸ்வின் கூறியுள்ளார்.

மும்பை,

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தற்போதைய விதிமுறைப்படி அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இருப்பினும் அந்த விதிமுறையை மாற்றி 7 - 8 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி கொடுக்குமாறு பி.சி.சி.ஐ.யிடம் அணிகளின் நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. அத்துடன் ரைட் டூ மேட்ச் (ஆர்டிஎம்) விதிமுறையை பயன்படுத்தி 3 - 4 வீரர்களை வாங்குவதற்கான உரிமையை கொடுக்குமாறும் பி.சி.சி.ஐ.யிடம் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளன. அதை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ தேவையான பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் இருப்பதிலேயே ஆர்டிஎம் தான் ஐ.பி.எல். ஏலத்தில் உள்ள மிகவும் நியாயமற்ற விதிமுறை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 'ரைட் டூ மேட்ச்' எனப்படும் ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஒரு அணியால் ஏற்கனவே தங்களுக்கு விளையாடிய வீரர்களை அடிப்படை முதல் அதிகபட்ச விலைக்கு மீண்டும் வாங்க முடியும். ஆனால் அது வீரர்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்காது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

எனவே அது வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை வைக்கும் அஸ்வின் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "ஆர்டிஎம் விட ஒரு வீரருக்கு நியாயமற்ற விதிமுறை இருக்க முடியாது. ஏனெனில் எடுத்துக்காட்டாக ஐதராபாத் அணிக்கு தற்போது ரூ. 5 - 6 கோடி சம்பளத்துக்கு விளையாடும் வீரர் ஏலத்தில் கலந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அவரை ஐதராபாத் அணி ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ஆர்டிஎம் முறையில் ஏலம் கேட்கும்.

ஆனால் அதே வீரரை மும்பை மற்றும் கொல்கத்தா ரூ. 6 கோடிக்கு வாங்க விரும்புவதாக வைத்துக்கொள்வோம். இறுதியில் மும்பை அவரை ரூ. 6 கோடிக்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் அப்போதும் ஐதராபாத் அதே ரூ. 6 கோடிக்கு ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி அந்த வீரரை வாங்கி விடும். இங்கே பிரச்சினை என்னவெனில் ஐதராபாத் மட்டுமே மகிழ்ச்சியடையும்.

மும்பை மற்றும் கொல்கத்தா மகிழ்ச்சியாக இருக்காது. மும்பை அணி போராடி அந்த வீரரை வாங்கியிருக்கும். ஆனால் திடீரென ஐதராபாத் உள்ளே புகுந்து ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கும். எனவே அந்த வீரருக்கு நியாயமான சம்பளமும் மதிப்பும் கிடைக்காது. எனவே ஐபிஎல் அணிகள் கேட்பதற்காக பி.சி.சி.ஐ. அந்த விதிமுறையை அலசி ஆராயாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது" என்று கூறினார்.


Next Story