கேப்டன்சி குறித்த பேட்டி: ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்த தோனி..? சமூக வலைதளங்களில் விவாதம்

image courtesy: PTI
கேப்டன்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தோனி பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதனையடுத்து 2-வது ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் வருகிர 28-ம் தேதி மோத உள்ளது.
முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி கேப்டன் பொறுப்பை கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று பலரும் கூறிய வேளையில், இந்த சீசனிலும் தோனி விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்தது ஏன்? அவர் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த பல்வேறு கருத்துகளை சமீபத்திய பேட்டியில் தோனி பேசியுள்ளார்.
அதில், "ஒரு கேப்டனாக இருக்கும் வீரர் எந்த அளவு பேட்டிங்கில் கை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு வீரராக உங்களுடைய செயல்திறன் சிறப்பாக இல்லை என்றால் என்னதான் நீங்கள் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் அது அணிக்கு பாதகமாக முடியும். ஒரு கேப்டன் தனது பேட்டிங் பார்மில் சிறந்த செயல்திறனை கொண்டிருந்தால்தான் அது அணிக்கும் சிறந்ததாக அமையும். முதலில் கேப்டனுடைய தனிப்பட்ட பார்ம் முக்கியம் அதன்பிறகு தான் கேப்டன்சி" என்று கூறினார்.
இந்நிலையில் தோனி இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் சமீப காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்த ரோகித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு காரணமாய் அமைந்தார். இதனை குறித்தே தோனி பேசியுள்ளார் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் கடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித், இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.