இந்திய அணியின் பந்து வீச்சு வலுவாக இல்லை - புஜாரா கவலை


இந்திய அணியின் பந்து வீச்சு வலுவாக இல்லை - புஜாரா கவலை
x

Image Courtesy: AFP

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் பந்துவீச்சு வலுவாக இல்லை என புஜாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வியும், கவலையும் இந்திய அணியின் பந்து வீச்சை பார்க்க சற்று பலவீனமாக தெரிவது தான். பேட்டிங் கொஞ்சம் பரவாயில்லை. டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். இந்திய அணியின் பந்து வீச்சு தான் வலுவாக இல்லை.

அது தான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. உங்களால் ஆல்-ரவுண்டர்கள் நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜாவை நீக்க முடியாது. அஸ்வின் ஓய்வு பெற்று விட்டதால், மெல்போர்ன் டெஸ்டில் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்பில்லை. இப்படி இருக்கும் போது பந்து வீச்சை எப்படி வலுப்படுத்துவது? மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு துணையாக 4-வது பந்து வீச்சாளராக நிதிஷ்குமார் ரெட்டியும், 5-வது பவுலராக ஜடேஜாவும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் விக்கெட் எடுக்க தவறுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியாக வேண்டும். 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்குரிய திறமை சிறப்பாக இல்லை. எனவே அவர்களின் பந்து வீச்சை சீக்கிரமாக மேம்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story