இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது - பிரதிகா ராவல்
அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 34.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரதிகா ராவல் 89 ரன், தேஜல் ஹசப்னிஸ் 53 ரன், ஸ்மிருதி மந்தனா 41 ரன் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகி விருது 89 ரன் விளாசிய பிரதிகா ராவலுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இன்றைய போட்டியில் (நேற்று) நான் சிரமமின்றி விளையாடினேன். கேப்டன் ஸ்மிருதி மந்தனா என்னுடன் களத்தில் இருந்தது மிகவும் உதவியாக இருந்தது. அவர் விளையாடுவதை மறுமுனையில் இருந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தேன். அவர் சிறப்பாக விளையாடியது என்மீது அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவியது.
இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அதனை அப்படியே அடுத்த போட்டிகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஆட்டத்தின் இறுதியில் தேஜல் நன்றாக விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.