ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவுரை
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் நங்கூரமாக நிலைத்து விளையாட மறுமுனையில் ரோகித், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பண்ட் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் டிரா செய்யும் நோக்கில் அணியை கொண்டு சென்றார். இருப்பினும் பண்ட் 30 ரன்களிலும், அவரை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி, ஜடேஜாவும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.ஜெய்ஸ்வால் 84 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதனால் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் , பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தனர் . இருப்பினும் அணியின் ஸ்கோர் 121-ஆக உயர்ந்த போது (58.4 ஓவர்) ரிஷப் பண்ட் அவசரப்பட்டு ஒரு ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இது கடும் விமர்சனத்துக்குளானது .
இந்த நிலையில்,ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது ,
முக்கியமான தருணத்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் குறித்து கேட்கிறீர்கள். அணி நிர்வாகம் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து விளையாட வேண்டியது அவசியமாகும். இது போன்ற சூழலில் 'ரிஸ்க்' எடுத்து ஆடும் போது, அதன் மூலம் எதிரணியை ஆட்டத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் பேட்டிங் செய்யும் விதம் குறித்து நாம் அனைவரும் பேசுவதை காட்டிலும், அவரே அதனை உணர்ந்து சரி செய்வதற்கான வழிமுறையை கண்டறிய வேண்டும்.என தெரிவித்தார் .