குல்தீப் யாதவ் "சுழல் ஜாலம்" - வங்காளதேச அணியை வீழ்த்திய இந்தியா
வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
ஆன்டிகுவா,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்8 சுற்றில் ஆன்டிகுவாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை (குரூப் 1) சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
'டாஸ்' ஜெயித்த வங்காளதேச அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அடித்து ஆடினர்.
4-வது ஓவரில் ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா (23 ரன், 11 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்தையும் தூக்கி அடித்தார். ஆனால் பந்து மேல் நோக்கி எழும்பி ஜாகிர் அலி கையில் தஞ்சம் அடைந்தது. அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வந்தார். அந்த அணி பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது.
9-வது ஓவரில் விராட்கோலி (37 ரன், 28 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) தன்சிம் ஹசன் சகிப் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து களம் கண்ட சூர்யகுமார் யாதவ் (6 ரன்) அதே ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய மகிழ்ச்சி மங்கும் முன்பே அடுத்த பந்தில் விக்கெட் கீப்பர் லிட்டன் தாசிடம் சிக்கி ஏமாற்றம் அளித்தார். முதலில் நிதானமாகவும், பிறகு அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட் 36 ரன்னில் (24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரிஷாத் ஹூசைன் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்விப் ஷாட் ஆடி தன்சிம் ஹசன் சகிப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபேவுடன் கைகோர்த்தார். நேர்த்தியாக ஆடிய ஷிவம் துபே 34 ரன்னில் (24 பந்து, 3 சிக்சர்) ரிஷாத் ஹூசைன் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து அக்ஷர் பட்டேல் களம் புகுந்தார். நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை எட்டியதுடன், அணி சவாலான ஸ்கோரை அடையவும் வழிவகுத்தார்.
20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), அக்ஷர் பட்டேல் 3 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
குல்தீப் அசத்தல்
இதைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (40 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் (29 ரன்), ரிஷாத் ஹூசைன் (24 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.
20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த வங்காளதேச அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திய அணி தனது கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.