இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் திடீர் விலகல்

நாளை நடைபெறும் போட்டியில் 4 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.
ஓவல்,
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்தப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா தீவிரமாக உள்ளது.
அதேவேளையில், போட்டியை சமன் செய்தாலே தொடரை வெல்ல முடியும் என்பதால் இங்கிலாந்து அணியின் வெற்றி முனைப்பில் இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஓல்லி போப் அணியை வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர நாளைய போட்டியில் பங்கேற்கும் பிளேயிங் லெவனில் மேலும் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.
ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் எனவும் அவர்களுக்கு பதிலாக கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டோங்கு ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






