கேப்டன் நல்ல பார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சினைகள் ஏற்படும் - இந்திய முன்னாள் கேப்டன் கருத்து
![கேப்டன் நல்ல பார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சினைகள் ஏற்படும் - இந்திய முன்னாள் கேப்டன் கருத்து கேப்டன் நல்ல பார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சினைகள் ஏற்படும் - இந்திய முன்னாள் கேப்டன் கருத்து](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38288287-ro45.webp)
கொண்டாடும் ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்வார்கள் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தோல்விகளுக்கு சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மோசமான பார்ம் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அணியை முன்னின்று வழி நடத்த வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் சுமாராக விளையாடி பின்னடைவை கொடுத்து வருகிறார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணி இப்படி தடுமாறுவதற்கு ரோகித் சர்மாதான் காரணம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா பெரிய வீரர். அவர் மீண்டும் பார்முக்கு வேகமாக வருவார் என்று நம்புகிறேன். பயிற்சியாளருக்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். பயிற்சியாளர் வெற்றி பாதையில் செட்டில் ஆவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும். இந்த மொத்த நாடும் நமது அணியின் சிறந்த செயல்பாடுகளை நோக்கி காத்திருக்கிறது. சமீப காலங்களில் சில நேரம் நமது அணி நன்றாக விளையாடியது.
ஆனால் தற்போது அணி செட்டிலாக இருப்பது போல் தெரியவில்லை. கேப்டன் நல்ல பார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சனைகள் ஏற்படும். அணி நன்றாக விளையாடாததால் ரசிகர்களிடம் கோபம் இருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியபோது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் போல் எனது வாழ்வில் பார்த்ததில்லை.
எனவே மோசமாக விளையாடும்போது அவர்கள் விமர்சனத்தையும் கொடுப்பார்கள். அதனாலேயே வீரர்களை அதிகமாக பாராட்டாதீர்கள். அதை அவர்களால் கையாள முடியாது என்று சொல்வேன். கொண்டாடும் ரசிகர்கள் சாட்டையால் அடிப்பது போல் விமர்சிப்பார்கள் என்பதே என்னுடைய கருத்து.
ஜஸ்பிரித் பும்ரா போன்ற பவுலர் இந்திய அணியில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் பார்த்ததில்லை. பும்ரா, கும்ப்ளே போன்ற பெரிய வீரர்கள் காயத்தைச் சந்தித்தால் அது அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே விரைவில் அவர் குணமடைவார் என்று நம்புகிறேன்" என கூறினார்.