அது மட்டும் நடக்காவிட்டால் ரோகித் தாமாகவே ஓய்வு அறிவிப்பார் - கவாஸ்கர் கணிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சமீப காலமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் சிறப்பானதாக அமையவில்லை. பேட்டிங் மட்டுமன்றி கேப்டனாகவும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த நியூசிலாந்து தொடரில் ஓப்பனிங்கில் தடுமாறிய அவர் இந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். அந்த இடத்தில் அதை விட மோசமாக விளையாடும் அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் இருந்தார்.
மேலும் டெஸ்ட்டில் கடந்த 13 இன்னிங்ஸ்களில் வெறும் 152 ரன்களை 11.69 என்ற மோசமான சராசரியிலேயே அடித்துள்ளார். இதனால் அவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி 2 போட்டிகளில் ரோகித் சர்மா பெரிய ரன்கள் குவிக்காவிட்டால் தாமாக ஓய்வு பெறுவார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ஏனெனில் அணிக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று ரோகித் சர்மா நினைக்கக் கூடியவர் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கண்டிப்பாக அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை ரோகித் சர்மா பெறுவார் என்று உறுதியாக சொல்வேன். ஆனால் அதனுடைய இறுதியில் ஒருவேளை அவர் ரன்கள் எடுக்காவிட்டால் ஓய்வு பற்றிய முடிவை ரோகித் சர்மா தமக்குத் தாமே எடுப்பார் என்பது என்னுடைய உணர்வாகும். ஏனெனில் ரோகித் சர்மா மிகவும் மனசாட்சியுள்ள வீரர்.
அவர் எப்போதும் அணிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மீது மிகவும் ஆழமான அக்கறை கொண்டவர். எனவே அடுத்த 2 போட்டிகளில் ரன்கள் குவிக்காவிட்டால் ரோகித் சர்மா தாமாகவே கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவார் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.