நான் செய்தது மிகப்பெரிய தவறு - பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து தோனி வருத்தம்


நான் செய்தது மிகப்பெரிய தவறு - பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து தோனி வருத்தம்
x

image courtesy: PTI

தினத்தந்தி 17 March 2025 4:53 AM (Updated: 17 March 2025 7:04 AM)
t-max-icont-min-icon

ஐ.பி.எல்.தொடரில் தான் கோபமடைந்த ஒரு தருணத்தை நினைவு கூர்ந்து தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. ஐ.பி.எல். தொடரிலும் சென்னை அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். களத்தில் அழுத்தமான சூழ்நிலைகளிலும் பொறுமையை கடைபிடிப்பதால் ரசிகர்கள் இவரை 'கூல் கேப்டன்' என்று அழைப்பர்.

இருப்பினும் அவரும் நிதானத்தை இழந்த தருணங்களும் உண்டு. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 2019 ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் கடைசி ஓவரின் 4வது பந்தை வீசிய பென் ஸ்டோக்ஸ் இடுப்புக்கு மேலே வீசினார். அதை எதிர்ப்புறம் இருந்த நடுவர் நோபால் வழங்கினார். ஆனால் லெக் அம்பயர் அது நோபால் கிடையாது என்று அறிவித்தார். இதனால் கோபமடைந்த தோனி களத்திற்கு சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த மகேந்திரசிங் தோனி நடுவர்களிடம் சண்டை போட்டது மிகப்பெரிய தவறு என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் பொறுமையிழந்த தருணம் ஒரு ஐ.பி.எல். போட்டியில் நடந்துள்ளது. ஆட்டமிழந்த பின்பும் நான் களத்திற்கு சென்றேன். அது மிகப்பெரிய தவறு. அதை தவிர இன்னும் சில தருணங்களில் கோபம் வந்துள்ளது. விளையாட்டில் உச்சகட்ட உணர்வுடன் விளையாடும் நீங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புவீர்கள். அதனாலேயே கொஞ்சம் கோபம் அல்லது விரக்தியுடன் இருக்கும்போது நீங்கள் உங்களுடைய வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்வேன். கோபம் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து ஆழமான மூச்சு விட்டு அமைதியாக வேண்டும். அது அழுத்தத்தை கையாள்வது போன்றது. உங்கள் உணர்ச்சிகள் முடிவெடுக்கும் திறனை பாதிக்கக்கூடாது" என்று கூறினார்.


Next Story