கம்பீரிடம் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை - சுப்மன் கில்

Image Courtesy: @BCCI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
பெக்கேன்ஹாம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடமும், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடமும் நான் பல முறை உரையாடி இருக்கிறேன். ஒரு கேப்டனாக என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
என்னால் முடியாத ஒன்றை செய்து காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்களிடம் இருந்து எந்த எதிர்பார்ப்போ அல்லது அழுத்தமோ எனக்கு இல்லை. ஆனால் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் எனக்குள் சில எதிர்பார்ப்பு உண்டு. அவை அனைத்தும் நான் என்னிடம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் தான். அது அவர்களிடமிருந்து வந்ததல்ல.
கோப்பைகளை வெல்வதை தவிர்த்து அணிக்குள் ஒவ்வொருவரும் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்க விரும்புகிறேன். இதுபோன்ற சூழலை உருவாக்குவது மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும். குறிப்பாக நாங்கள் நிறைய தொடர்களில் அல்லது அதிகமான ஆட்டங்களில் வெவ்வேறு அணி வீரர்களை வைத்து விளையாட வேண்டி உள்ளது. எனவே இதை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.






