பும்ரா பந்துவீச்சை நான் ரசிக்கிறேன் - நியூசிலாந்து முன்னாள் வீரர்
மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக நன்றாக பந்து வீசுவது மிகவும் கடினம் என்று டிம் சவுதி தெரிவித்துள்ளார்.
வெலிங்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். அதனால் அவரை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து முன்னாள் வீரரான டிம் சவுதி 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக நன்றாக பவுலிங் செய்வது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். அதை கச்சிதமாக செய்து அசத்தி வரும் பும்ராவை தாம் ரசிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. "காயத்திற்கு முன் இருந்ததை விட தற்போது பும்ரா கம்பேக் கொடுத்து மிகச்சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறார். எனவே அவர் எப்போதும் ஒரு சிறப்பு திறமை கொண்டவர். தனித்துவமான ஆக்சனை கொண்டுள்ள அவரிடம் வேகம் மற்றும் திறன் ஆகியவையும் உள்ளன. நல்ல வேகத்தில் பந்தை இருபுறங்களிலும் திருப்புவது மிகவும் கடினமான ஒன்றாகும். அதைப் பெற்றுள்ள அவரிடம் நல்ல திறன் தொகுப்புகளும் தனித்துவமான பவுலிங் ஆக்சனும் இருக்கிறது. அதை வைத்து அவர் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்.
3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பும்ராவை பொறுத்த வரை தற்சமயத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இருப்பது அற்புதமான சாதனையாகும். அந்த வகையில் ஏற்கனவே சொன்னது போல் காயத்தை சந்தித்தாலும் அதிலிருந்து அவர் மீண்டு வந்து சிறப்பாக விளையாடுகிறார். அவரது பந்துவீச்சை நான் ரசிக்கிறேன். இன்னும் சில வருடங்கள் அவர் எப்படி அசத்தப்போகிறார் என்பதையும் பார்ப்பதற்காக ஆவலுடன் உள்ளேன்" என்று கூறினார்.