தோனியால்தான் ஓய்வு முடிவை மாற்றினேன்.. இல்லையெனில்.. - அஸ்வின்


தோனியால்தான் ஓய்வு முடிவை மாற்றினேன்.. இல்லையெனில்.. - அஸ்வின்
x

image courtesy: PTI

தினத்தந்தி 17 March 2025 5:38 AM (Updated: 17 March 2025 5:41 AM)
t-max-icont-min-icon

ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த வருடம் விடைபெற்றார். டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

அப்படிப்பட்ட அவர் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் பிளேயிங் 11-ல் இடம் பெறும் அஸ்வினுக்கு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை.

மேலும் ஓய்விற்கு பிறகு ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அஸ்வின் அறிவித்திருந்தார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து எதிர்வரும் சீசனுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு தொப்பியை வழங்க இந்திய முன்னாள் கேப்டனான தோனியை அழைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் அந்த போட்டியுடன் ஓய்வு பெறலாம் என்று முடிவு எடுத்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்போது தோனி வராததால் அந்த முடிவை மாற்றியதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியின் ஸ்பெஷல் தொப்பியை வழங்க எம்.எஸ். தோனிக்கு நான் அழைப்பு விடுத்தேன். அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இருப்பினும் தோனியால் அங்கே வர முடியவில்லை. அதனால் ஓய்வு முடிவை மாற்றினேன். ஆனால் அதற்கு பதிலாக மீண்டும் அவர் சென்னை அணியில் என்னை எடுத்து பரிசை கொடுப்பார் என்று நினைக்கவே இல்லை.

இது அதை விட சிறந்த பரிசு. அதற்காக நன்றி தோனி. சென்னை அணியில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் நிறைய சாதித்தவனாக அங்கே இல்லை. ஒரு வட்டத்தை முழுமை செய்பவனாக மீண்டும் அங்கே இருக்க விரும்புகிறேன். இங்கே எனது கெரியரை தொடங்கிய காலத்தில் விளையாடியதைப் போல் மீண்டும் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளேன். இது இருப்பதற்கு அற்புதமான இடம்" என்று கூறினார்.



Next Story