அவர் இளம் வயது சேவாக் போன்றவர் - இந்திய வீரருக்கு உத்தப்பா ஆதரவு


அவர் இளம் வயது சேவாக் போன்றவர் - இந்திய வீரருக்கு உத்தப்பா ஆதரவு
x

சேவாக்கிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என்று உத்தப்பா கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா, ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆனால் தற்சமயம் மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வருகிறார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடைசியாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்த அவர், அதன்பின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இதனால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் அபிஷேக் சர்மா இளம் வயது சேவாக் போன்றவர் அவரை உடனடியாக அணியிலிருந்து நீக்கக்கூடாது என முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " அபிஷேக் சர்மாவிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை பார்க்க முடியாது. அவரைப் போன்ற ஒரு வீரர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவரை சுதந்திரமாக விளையாட வைத்தால் நிச்சயம் அவரால் அதிரடியான ரன் குவிப்பை வழங்க முடியும். கடந்த காலங்களில் சேவாக் இதையேதான் செய்து வந்தார். சேவாக்கிடம் இருந்து நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிட்டால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். எப்பொழுதுமே அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் 100 ரன்களை அடிப்பதை விட விரைவாக 50-60 ரன்கள் அடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல அதிவேகமான தொடக்கத்தை கொடுக்கும். எனவே அவரைப் போன்ற வீரரை வீரிடமிருந்து தொடர்ச்சியான நிலையான ஆட்டத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதிரடியான தொடக்கத்தை மட்டுமே நாம் எதிர்பார்க்க வேண்டும்.

அவருக்கான சுதந்திரத்தை வழங்கி அவரை அவரது போக்கில் விளையாட விட்டால் நிச்சயம் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தரக்கூடிய ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார். எனவே அவரை அணியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story