உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு


உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு
x
தினத்தந்தி 10 Jan 2025 2:13 PM IST (Updated: 10 Jan 2025 2:17 PM IST)
t-max-icont-min-icon

இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் கவனத்தை செலுத்தாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து முக்கியமான தருணங்களில் விக்கெட்டை தாரை வார்த்தார். இதனால் அவரை 4-வது போட்டியின்போது சுனில் கவாஸ்கர் 'முட்டாள்.. முட்டாள்' என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார். மேலும் பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இந்நிலையில் ரிஷப் பண்டிடம் உலகிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அஸ்வின் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் தடுப்பாட்டம் விளையாடி மிகவும் அரிதாகவே விக்கெட்டை இழப்பார். ஏனெனில் இந்த உலகிலேயே அவரிடம் சிறந்த தடுப்பாட்டம் இருக்கிறது. இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. அவருக்கு எதிராக வலைப் பயிற்சியில் நான் நிறைய பவுலிங் செய்துள்ளேன். அப்போது போல்ட், எட்ஜ், எல்பிடபிள்யூ முறைகளில் அவர் அவுட் ஆனதில்லை. அந்த வகையில் தனது கைகளில் அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்துள்ளார்." என்று கூறினார்.


Next Story