அவரால் முடியும் ஆனால் செய்ய மாட்டார் - கவாஸ்கரின் கருத்தை உண்மையாக்கிய ரிஷப் பண்ட்


அவரால் முடியும் ஆனால் செய்ய மாட்டார் - கவாஸ்கரின் கருத்தை உண்மையாக்கிய ரிஷப் பண்ட்
x
தினத்தந்தி 9 Dec 2024 1:53 PM IST (Updated: 9 Dec 2024 1:57 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இதில் அடிலெய்டு மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டி 2 1/2 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. இதில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் 2-வது நாள் முடிவில் நிதிஷ் ரெட்டி மற்றும் ரிஷப் பண்ட் களத்தில் இருந்தனர். அந்த சமயத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து தடுமாறியது.

அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா? என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்ணனையாளர் மார்க் நிகோலஸ், கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு முடியும் ஆனால் அவர் அதை செய்ய மாட்டார் என்று சுனில் கவாஸ்கர் பதிலளித்தார்.

இது குறித்து வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் பேட்டிங் மிகவும் பொழுதுபோக்காக இருக்கிறது என்பதில் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் பழைய காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து வேறு போட்டிகள் இருக்காது. டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்தால் நீங்கள் ரஞ்சிக்கோப்பை அல்லது கிளப் கிரிக்கெட்டுக்கு விளையாடச் செல்ல வேண்டும்.

ஆனால் தற்போது சுமாராக விளையாடி இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டால் கூட உங்களுக்கு ஐபிஎல் இருக்கிறது. இப்போட்டியில் அவரால் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார்" என்று கூறினார்.

கவாஸ்கர் கூறியது போலவே ரிஷப் பண்ட் 3-வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story