சாம்சனின் இந்த ஆட்டத்திற்கு கம்பீர் காரணமில்லை - டி வில்லியர்ஸ்


சாம்சனின் இந்த ஆட்டத்திற்கு கம்பீர் காரணமில்லை - டி வில்லியர்ஸ்
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்தினார்.

டர்பன்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வெறும் 17.5 ஓவர்களிலேயே 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடைசியாக நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சதமடித்திருந்த அவர் இந்தியாவுக்காக அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வீரராகவும் சாதனை படைத்தார். இந்திய அணியில் அறிமுகமான கால கட்டங்களில் நிலையான இடம் கிடைக்காமல் போரடிய அவர், தற்போது தனது திறமையை வெளிகாட்டியதன் மூலம் அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார்.

இந்நிலையில் சாம்சன் சிறப்பாக செயல்படுவது பெருமையளிப்பதாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவருடைய இந்த ஆட்டத்திற்கு கம்பீர் போன்ற புதிய பயிற்சியாளர் குழு காரணமாக இருக்காது என்றும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்சன் பெரிய சதம் அடித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளது அற்புதமானது. அவரால் நானும் பெருமையுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அவருடன் நானும் பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துள்ளேன். நான் எப்போதும் சாம்சனின் ரசிகன். அவர் சிறப்பாக விளையாடுவதை நானும் விரும்புகிறேன். ஒருமுறை ஆர்சிபி அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் அவர் 100 ரன்கள் அடித்தபோது நானும் அங்கே இருந்தேன். அப்போதே இவர் ஸ்பெஷலானவர் என்று நான் நினைத்ததை இன்று சாம்சன் நிரூபித்துள்ளார்.

அவர் பெரும்பாலும் 140 - 160 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடுவார். ஆனால் இப்படி 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி பார்த்ததில்லை. அதிலும் கடந்த சதம் மிகவும் வேகமானது. அவருடைய இந்த ஆட்டத்தை ஏதோ ஒரு விஷயம் கிளிக் செய்துள்ளது. அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவருடைய ஆட்டத்தில் புதுமை, வேடிக்கையான ஷாட், ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் போன்றவை இல்லை. அவர் அடிப்படைகளை பின்பற்றி விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருக்கிறது.

அவர் 3 பார்மெட்டிலும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதைத் தேர்வாளர்களும் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏதோ ஒன்று அவரை கிளிக் செய்துள்ளது. கம்பீர், லட்சுமணன் ஆகியோருக்கு மரியாதை குறைவாக எதுவுமில்லை. ஆனால் இந்தப் பையன் சிறப்பாக உணர்ந்து விளையாட வேண்டும் என்ற முதிர்ச்சியை தாமாக பெற்றுள்ளதாக கருதுகிறேன்"என்று கூறினார்.


Next Story