முதல் டி20: பதும் நிசங்கா அதிரடி வீண்.. இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேக்கப் டபி தேர்வு செய்யப்பட்டார்.
மவுண்ட் மவுங்கானுய்,
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 62 ரன்களும், பிரேஸ்வெல் 59 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் பினுரு பெர்னாண்டோ, மகேஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரகள் ஆன நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. குசல் மெண்டிஸ் 40 ரன்களில் ஜேக்கப் டபியின் பந்து வீச்சில் 14-வது ஓவரில் வீழ்ந்தார். ஜேக்கப் டபி அதே ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
பதும் நிசங்கா தனி ஆளாக போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய அவரும் 90 ரன்களில் ஆட்டமிழக்க அதோடு இலங்கை அணியின் வெற்றியும் பறிபோனது.
முடிவில் இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கை கூட தொடவில்லை. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 3 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி மற்றும் ஜகரி பவுல்க்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நியூசிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜேக்கப் டபி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.