பரூக்கி அபார பந்து வீச்சு... உகாண்டாவை 58 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
கயானா,
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உகாண்டா அணியின் கேப்டன் மாசாபா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 183 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 76 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய உகாண்டா அணியின் பேட்ஸ்மேன்கள் பசல்ஹாக் பரூக்கியின் பந்து வீச்சில் சிக்கினர். அவரது பந்துவீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த உகாண்டா 16 ஓவர்களிலேயே 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பசல்ஹாக் பரூக்கி 5 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.