எமர்ஜிங் ஆசிய கோப்பை: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி


எமர்ஜிங் ஆசிய கோப்பை: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

image courtesy: Pakistan Cricket twitter

184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அல் அமேரத்,

8 அணிகள் இடையிலான வளர்ந்து வரும் வீரர்களுக்கான 6-வது ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஓமனில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அபிஷேக் சர்மா 22 பந்தில் 35 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 19 பந்தில் 36 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

தொடர்ந்து திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர். இதில் திலக் வர்மா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் வதேரா 25 ரன்கள், ஆயுஷ் பதோனி 2 ரன்கள், ரமந்தீப் சிங் 17 ரன்கள், நிஷாந்த் சிந்து 6 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். நிலைத்து நின்று ஆடிய திலக் வர்மா 44 ரன்களில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்களும், யாசிர் கான் 33 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.


Next Story