துபே - ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்: இங்கிலாந்தும் அதையே செய்திருக்கும் - மைக்கேல் வாகன்


துபே - ஹர்ஷித் ராணா மாற்று வீரர் விவகாரம்:  இங்கிலாந்தும் அதையே செய்திருக்கும் - மைக்கேல் வாகன்
x

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக களமிறங்கினார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே பேட்டிங் செய்கையில் கடைசி ஓவரில் ஜாமி ஓவர்டான் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதால் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் முழுமையான பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி விதிமுறையை மீறி விளையாட வைத்ததாக குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் இந்த முடிவை நாங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது.

இந்நிலையில் அந்த சூழ்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து அணியும் வாய்ப்பு கிடைத்தால் இந்தியா எடுத்த அதே முடிவை எடுத்திருக்கும் என்று மைக்கேல் வாகன் தற்போது தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஷிவம் துபேவுக்கு பதிலாக ராணாவை எவ்வாறு சரியான மாற்று வீரர் என்று அவர்கள் கண்டறிந்தார்கள்? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் ஒரு பவுலர் எப்படி பகுதி நேரமாக பவுலிங் செய்யும் பேட்ஸ்மேனுக்கு பதிலாக விளையாட முடியும். அது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதே சமயம் இங்கிலாந்துக்கு அது போன்ற வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர்களும் அதையே செய்திருப்பார்கள். ஆனால் துபேவுக்கு பதிலான சரியான மாற்று வீரர் ராணா என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியாது" என கூறினார்.


Next Story