சரித் அசலங்கா சதம்... வங்காளதேசத்திற்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

Image Courtesy: @OfficialSLC
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார்.
கொழும்பு,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது. தொடர்ந்து இலங்கையின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா களம் கண்டனர்.
இதில் மதுஷ்கா 6 ரன்னிலும், பதும் நிசாங்கா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட சரித் அசலங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் குசல் மெண்டிஸ் 45 ரன், ஜனித் லியானகே 29 ரன், ரத்னநாயகே 22 ரன், வனிந்து ஹசரங்கா 22 ரன், காமிந்து மெண்டிஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சரித் அசலங்கா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.






