சாம்பியன்ஸ் டிராபி: இது முட்டாள்தனமான முடிவு - ஐ.சி.சி.-யை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்


சாம்பியன்ஸ் டிராபி: இது முட்டாள்தனமான முடிவு - ஐ.சி.சி.-யை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

image courtesy: ICC

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனக்குரிய ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடுகிறது.

லண்டன்,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

முன்னதாக இந்த தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலம் பிரச்சினை இருந்து வருவதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்தது. இதற்கு அனைத்து அணிகளும் சம்மதம் தெரிவித்தன.

துபாயில் இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் இந்தியாவுக்காக முட்டாள்தனமான முடிவை ஐ.சிசி. எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உலக கிரிக்கெட்டின் மிக உயர்ந்த முக்கியமான ஒரு தொடரில் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் சங்கடமானது. ஒருதலைபட்சமாக தொடர் நடத்தப்படுவது கேலிக்குரியது. நீங்கள் இவ்வாறு செய்வது சிரிப்பை கொடுக்கிறது. அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது முட்டாள்தனமான முடிவு.

இந்த ஐ.சி.சி. தொடர் இப்படி நடத்துவதை வர்ணிக்க என்னிடம் இதை தவிர்த்து வார்த்தைகள் இல்லை. ஏனெனில் நீங்கள் அணிகளை அங்கேயும் இங்கேயும் வர வைக்கிறீர்கள். துபாய்க்கு வந்த அணிகள் மீண்டும் பாகிஸ்தான் செல்ல நேரிடுகின்றன. நான் மிகவும் நகைச்சுவையான நபர். ஆனால் இப்படி செய்யப்பட்டுள்ளது மிகவும் வேடிக்கையானது. ஆனால் நான் வீரர்களில் ஒருவராக இருந்தால் இது வேடிக்கையான விஷயம் அல்ல" என்று கூறினார்



Next Story