சாம்பியன்ஸ் டிராபி: அந்த வீரர் கண்டிப்பாக இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்


சாம்பியன்ஸ் டிராபி: அந்த வீரர் கண்டிப்பாக இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்
x
தினத்தந்தி 20 Jan 2025 4:27 AM (Updated: 20 Jan 2025 4:36 AM)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபியில் ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் பேக் அப் தொடக்க ஆட்டக்காரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் அணி (பிளேயிங் லெவன்) வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் திறமையான ஜெய்ஸ்வால் எப்படியாவது பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் சுப்மன் கில் வருங்கால கேப்டன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நாம் சொன்னோம். ஆஸ்திரேலியாவில் அபாரமாக விளையாடிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்த தயாராக இருப்பதை காண்பித்தார். அதனால் தற்போது தேர்வாகியுள்ள அவர் பிளேயிங் லெவனிலும் விளையாட வேண்டும். ஆனால் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்தான் தொடக்க வீரராகவும் விளையாடுவார்.

ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் கில் 3, கோலி 4வது இடங்களில் விளையாடுவார்கள் என்றும் உங்களால் சொல்ல முடியாது. அப்படி நடந்தால் ஸ்ரேயாஸ் எப்படி விளையாட முடியும். ஆனால் நல்ல பார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் போன்றவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை கில் துணை கேப்டனாக இல்லாமல் இருந்தால் ரோகித் - ஜெய்ஸ்வால் ஓப்பனிங், கோலி 4, ஸ்ரேயாஸ் 5வது இடத்தில் விளையாடுவார்கள்.

ஆனால் தற்போது உங்களுடைய துணை கேப்டன் வெளியே உட்கார முடியாது. அடுத்த 6 - 8 மாதங்களில் மாற்றங்கள் நடைபெறும் போது சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பை பெறலாம். அதனாலேயே தற்போது அவர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் ஜெய்ஸ்வால் விளையாடுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன்

ஓப்பனிங்கில் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது முக்கியம். அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த உலகக் கோப்பையில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததால் விளையாடுவதற்கு தகுதியானவர். அவரை விட சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அதே சமயம் எப்படியாவது ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும். ஆனால் அது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.


Next Story