சாம்பியன்ஸ் டிராபி:இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை- யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்..?

image courtesy:ICC
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) நேற்று அறிவித்தது. வீரர்கள், பயிற்சி குழுவினர், உதவி அதிகாரிகள், தேர்வு குழுவினர் ஆகியோருக்கு இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் யார், யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இந்த ரூ.58 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற விவரத்தை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
அதன்படி, சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.3 கோடியும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ரூ.3 கோடியும், மற்ற துணை பயிற்சியாளர்கள் தலா ரூ.50 லட்சமும், ஆதரவு ஊழியர்கள் தலா ரூ.50 லட்சமும், தேர்வுக்குழு அதிகாரிகள் தலா ரூ. 25 லட்சமும் பெறுவார்கள் என்று சைகியா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ரோகித், விராட் என அனைத்து இந்திய வீரர்களும் தலா ரூ. 3 கோடி பரிசுத்தொகை பெற உள்ளார்கள்.