சாம்பியன்ஸ் டிராபி: எதிரணி எதுவாக இருந்தாலும் இந்தியா வீழ்த்தும் - கங்குலி நம்பிக்கை


சாம்பியன்ஸ் டிராபி: எதிரணி எதுவாக இருந்தாலும் இந்தியா வீழ்த்தும் - கங்குலி நம்பிக்கை
x

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.

மும்பை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் 50 ஓவர் போட்டி இதுவாகும். இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழி தீர்க்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள்) ஆழமான திறமை கொண்டிருப்பதால் இந்திய அணி எந்த எதிரணியையும் வீழ்த்தி கோப்பையை வெல்லுமென இந்திய முன்னாள் வீரர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது. மேலும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எதிரணி யாராக இருந்தாலும் இந்தியா மிகவும் வலுவானது. யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது" என்று கூறினார்.


Next Story