சாம்பியன்ஸ் டிராபி: தான் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்த ஆகாஷ் சோப்ரா.. யாருக்கெல்லாம் இடம்..?
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா அறிவித்துள்ளார்.
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்காக தான் தேர்வு செய்த இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவித்துள்ளார். ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்வு செய்துள்ள அவர், விராட் கோலியையும் அணியில் சேர்த்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.