சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படாததை ஜீரணிக்க முடியவில்லை - முகமது சிராஜ்

Image Courtesy: IPL
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 31 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 61 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து முகமது சிராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது, உங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இந்த கூட்டத்தில் என் குடும்பத்தினரும் இருந்தார்கள். அது என்னை வெகுவாகவே உயர்த்தியது. நான் ஏழு வருடங்களாக ஆர்.சி.பி அணியில் இருந்து உள்ளேன். என் பந்துவீச்சு மற்றும் மனநிலை குறித்து நான் கடுமையாக உழைத்து உள்ளேன்.
அது எனக்கு நன்றாக வேலை செய்கிறது. ஒரு காலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நான் தேர்வு செய்யப்படாததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், என்னை நானே உற்சாகப்படுத்தி என் தவறுகளை சரி செய்து மீண்டும் மகிழ்ச்சியாக விளையாட்டில் ஈடுபட தொடங்கினேன்.
நீங்கள் சிறப்பாக விளையாட முயற்சிக்கும்போது உங்களது மனநிலை உச்சத்தில் இருக்கும். நீங்கள் பந்தை உள்ளேயும், வெளியேயும் நகர்த்தும்போது அது உங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.