பைகிராப்ட் ஒன்றும் பள்ளி முதல்வர் கிடையாது - பாக்.அணியை சாடிய இந்திய முன்னாள் வீரர்


பைகிராப்ட் ஒன்றும் பள்ளி முதல்வர் கிடையாது - பாக்.அணியை சாடிய இந்திய முன்னாள் வீரர்
x

ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லீக் சுற்றில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக ‘டாஸ்’ போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.

இந்நிலையில் பைகிராப்ட் மீதான பாகிஸ்தானின் செயலை இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கை குலுக்காதது எங்களுடைய முடிவு. நாங்கள் கைகுலுக்க விரும்பவில்லை என்று இந்திய வீரர்கள் கூறினர். இது எங்கள் பக்கத்தின் கதை. இப்போது நீங்கள் ஆண்டி பைகிராப்ட் கிரிக்கெட்டின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள். சூர்யகுமாரிடம் சென்று பாகிஸ்தானுடன் கை கொடுங்கள் என்று சொல்வதற்கு பைகிராப்ட் ஒன்றும் பள்ளி ஆசிரியர் அல்லது முதல்வர் கிடையாது. அது அவருடைய வேலையும் கிடையாது.

இப்படி ஒரு மோசமான காட்சியைப் பார்த்தது இல்லை. இந்தியா முன்கூட்டியே நடுவரிடம் இது எங்கள் முடிவு என்றும், அதைப் பின்பற்றுவோம் என்றும் தெரிவித்தது. அவ்வளவுதான். அந்த நாடகத்துக்கு பின் தோற்ற நீங்கள் (பாகிஸ்தான்) எதைப் பற்றி புகார் செய்கிறீர்கள்? நாங்கள் கைகுலுக்காததால் நீங்கள் போட்டியில் தோற்கவில்லை. தயவுசெய்து சென்று உங்களால் உண்மையில் மேம்படுத்தக்கூடியவற்றைக் கண்டறியுங்கள்.

இந்தியா கைகுலுக்காததுதான் உங்களுடைய பிரச்சனையென்றால் அதற்கான பதிலை நீங்கள் ஏன் அமீரகத்துக்கு எதிரான போட்டியில் தேடினீர்கள்? பைகிராப்ட் அவர்களை ஏன் பலிக்கடாவாக உருவாக்கினீர்கள்? அவர் எந்த தவறும் செய்யவில்லை. இங்கே பைகிராப்ட்டின் தவறு என்னவென்று சரியாகச் சொல்லுங்கள்?” என கூறினார்.

1 More update

Next Story