கபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது 11-வது முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சேனா (SENA) நாடுகளில் ஜஸ்பிரித் பும்ரா 7 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில்தேவின் வாழ்நாள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.