அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற முடியாது - ஆகாஷ் சோப்ரா
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி நடைபெறும் இடம் இந்தியா தகுதி பெறுவதை பொறுத்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்தது. மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் வரும் 12-ஆம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.
இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பிடிப்பார்கள் என்பதால் இந்த தொடருக்கான வீரர்களின் தேர்வு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை. அதே வேளையில் மிடில் ஆர்டரில் மிகச்சிறப்பாக ரன்களை குவித்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஒருநாள் அணியில் இடம் பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அவருக்கு முன்னுரிமை கிடைக்கும்.
அதேபோன்று தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், அவருக்கு மாற்றுவீரராக கே.எல் ராகுலும் இடம்பிடித்து உள்ளதால் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இல்லை" என்று கூறினார்.