பார்டர்-கவாஸ்கர் டிராபி; ஆஸ்திரேலிய தொடக்க வீரராக இவரை களம் இறக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்


பார்டர்-கவாஸ்கர் டிராபி; ஆஸ்திரேலிய தொடக்க வீரராக இவரை களம் இறக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்
x

Image Courtesy : AFP

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி களம் இறங்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் ஒரு வாரத்திற்கு முன்பு சாம் கான்ஸ்டாஸ் துவக்க வீரராக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவர் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். ஆனால் அவர் இளமையாக இருக்கிறார். இதனால் நான் கொஞ்சம் பொறுமையாக யோசித்தேன். மேலும் அவர் பெர்த் மற்றும் காபா மைதானங்களில் விளையாடவும் இல்லை. அடிலெய்டு மைதானத்தில் அவர் பிங்க் பந்து டெஸ்டிலும் விளையாடியது கிடையாது. எனவே அவருக்கு எதிராக நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு திறமை இருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

குயின்ஸ்லாந்தில் பிறந்து தற்பொழுது தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிக் கொண்டிருக்கும்,மேலும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு கேப்டனாக இருக்கும் நாதன் மெக்ஸ்வீனி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களம் இறங்க சரியான வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். தற்பொழுது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க ஆட்டக்காரராக அவர் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story