பார்டர் - கவாஸ்கர் கோப்பை: ரோகித் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட முதலில்... - புஜாரா ஆலோசனை


பார்டர் - கவாஸ்கர் கோப்பை: ரோகித் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட முதலில்... - புஜாரா ஆலோசனை
x

ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட ரோகித் சர்மாவுக்கு புஜாரா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். தற்போது ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன்ஷிப் பதவியை பும்ராவுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சிறப்பாக செயல்பட புஜாரா சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரோகித் சர்மாவின் தற்போதைய பேட்டிங் பார்ம் சற்று சறுக்களை சந்தித்துள்ளது. எனவே மீண்டும் அவர் ரன் குவிக்க தொடங்கிவிட்டால் அவரது கேப்டன்சியும் மிகச்சிறப்பாக இருக்கும். ஏனெனில் ரோகித் சர்மா முதலில் தனது பேட்டிங் பார்மை மீட்டெடுக்க வேண்டும். அவ்வாறு அவர் பார்மை மீட்டெடுத்து ரன்களை குவிக்கும் பட்சத்தில் கேப்டன்சியிலும் நல்ல மாற்றம் இருக்கும்.

ஒரு கேப்டன் பார்ம் அவுட் ஆகிவிட்டால் அவரது தலைமை பண்பிலும் நிச்சயம் அந்த தாக்கம் இருக்கும். ரோகித் எப்போது எல்லாம் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறாரோ அப்போதெல்லாம் கேப்டன்சியிலும் அசத்தியிருக்கிறார். எனவே தற்போதைய நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்ம் என்பது முக்கியம். அனுபவ வீரரான அவர் நிச்சயம் இதை விரைவில் உணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வார்" என்று கூறினார்.


Next Story