ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்


ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
x

Image Courtesy: @ACCMedia1

தினத்தந்தி 19 July 2024 6:37 AM IST (Updated: 19 July 2024 6:50 AM IST)
t-max-icont-min-icon

8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று தொடங்குகிறது.

தம்புல்லா,

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் 4 போட்டி தொடர்கள் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டது. அவை அனைத்திலும் இந்திய அணி கோப்பையை வென்றது. இதேபோல் 20 ஓவர் அடிப்படையில் நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. ஒரே ஒரு முறை (2018) மட்டும் வங்காளதேசம் கோப்பையை தனதாக்கியது.

இந்த நிலையில் 9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்து பர்மா தலைமையிலான நேபாள அணி, இஷா ஒஜா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.


Next Story