ஆசிய கோப்பை: ரிஷப் பண்ட் விலகல்... வெளியான தகவல்


ஆசிய கோப்பை: ரிஷப் பண்ட் விலகல்... வெளியான தகவல்
x

image courtesy:PTI

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த காயம் முழுமையாக குணமடைய 6-8 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது விலகல் நிச்சயம் இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story