அடிலெய்டு டெஸ்ட்: ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் இந்தியா 180 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த கேஎல் ராகுல் - கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கே.எல். ராகுல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி நிலைக்கவில்லை. அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மூவரின் விக்கெட்டுகளையும் ஸ்டார்க் வீழ்த்தினார். சிறிது நேரத்திலேயே கில்லும் 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் தடுமாறியது.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் பண்ட் 21 ரன்களிலும், ரோகித் சர்மா 3 ரன்களிலும், அஸ்வின் 22 ரன்களிலும் அவுட்டாகினார். இறுதி கட்டத்தில் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி அணிக்கு விரைவாக ரன்களை சேர்த்தார்.
முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.