டி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசி சாதனை படைத்த டெல்லி


டி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசி சாதனை படைத்த டெல்லி
x

image courtesy: twitter/@delhi_cricket

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

மும்பை,

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆயுஷ் பதோனி தலைமையிலான டெல்லி அணி, ரெக்ஸ் சிங் தலைமையிலான மணிப்பூரை எதிர்கொண்டது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அகமது ஷா 32 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் தியாகி மற்றும் திக்வேஷ் ரதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தூள் 59 ரன்கள் அடித்தார்.

முன்னதாக இந்த போட்டியில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களும் பந்து வீசினர். விக்கெட் கீப்பரான ஆயுஷ் பதோனியும் 2 ஓவர்கள் வீசி 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 11 வீரர்களும் பந்து வீசிய முதல் அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை டெல்லி படைத்துள்ளது. மேலும் இது டி20 கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


Next Story