நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ராவுக்கு ஓய்வளியுங்கள் - இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து


நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ராவுக்கு  ஓய்வளியுங்கள் - இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து
x

image courtesy: PTI

தினத்தந்தி 27 Oct 2024 7:25 PM IST (Updated: 27 Oct 2024 8:28 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "பும்ரா கடந்த வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் விளையாடி இருந்தார். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இப்படி அடுத்தடுத்து அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவது இந்திய அணிக்கு நல்லதுதான் இருந்தாலும் எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்த தொடரின் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டியது அவசியம். எனவே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஓய்வளிக்க வேண்டும். அப்படி பும்ராவை அமர வைக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மீண்டும் சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கலாம். இந்த சமயத்தில் நிச்சயம் ஒரு ஓய்வு தேவை. அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் அவரால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்" என்று கூறினார்.


Next Story